Friday, July 12, 2013

உனக்கென்ன



உனக்கென்ன
எங்கோ ஓர் மூலையில்
நிம்மதியாய் இருக்கிறாய்

என் நிம்மதியை
எடுத்துக்கொண்டு.....

நிம்மதியை மட்டும்



என்ன வேண்டுமென்று
கேட்கும் போதெல்லாம்
ஒன்றும் வேண்டாமென்று
சொல்லிவிடுவாய்

போகும்போது மட்டும் ஏனோ
கேட்காமலேயே
எடுத்தக்கொண்டு போய்விட்டாய்
என் நிம்மதியை மட்டும்.....

வருவாயா?



அது ஒரு வசந்த காலம்

அவசர அவசரமாய்
குளித்துவிட்டு
சாப்பிட்டும் சாப்பிடாமலும்
லட்சியத்தோடு ஓடிவருவேன்

நீ வரும் பேருந்தை
பிடிக்கவேண்டும்
என்பதற்காக.....

படியிலேயே தொங்கி
பழக்கப்பட்ட நான்
அப்போதெல்லாம்
உள்ளே வந்துவிடுவேன்

உனைப் பாரக்கவேண்டும்
என்பதற்காக.....

அங்கும் இங்குமாய்
குனிந்தும் நிமிர்ந்தும்
ரொம்பவே
சிரமப்பட்டு போவேன்

ஒருமுறை உன்னை
முழுதாய் பார்ப்பதற்குள்.....

நீயோ ஒரு ஓரமாய்
வளைந்து நிற்பாய்
நெல்லைச் சுமந்த
நெற்கதிராய்
பாதம் பாரத்து.....

நானோ
இமைப்பொழும்
இமைக்காமல்
ரசித்துக்கொண்டிருப்பேன்
இலக்கியமான
உன் முகத்தை.....

பேருந்தில்
சுய நினைவோடு
ஏறும் நான்
நீ இறங்கும்போது தான்
சுயநினைவுக்குத்
திருப்புவேன்.....

தினம் தினம்
படிக்கத் தவறுவதில்லை
உன் தலைவகிட்டில்
எழுதியிருக்கும்
என் தலையெழுத்தை.....

எனக்குத் தெரிந்து
உன்னைச் சுற்றிய
பொழுதுகள் தான் அதிகம்
கோவிலைச் சுற்றிய
பொழுதுகளை விட.....

உனது
குனிந்த நடையில்
கவிழ்ந்து போனது
என் இதயம்.....

உனக்குத் தெரிந்திருக்க
நியாயமில்லை

உன்
இரட்டைச் சடைகளின் நடுவே
என் உயிர்
ஊசலாடிக்கொண்டிருப்பது......

எங்கேயாவது
ஊருக்குச் சென்றுவிடலாம் என்றால்
அங்கும் வந்து
உதைக்கிறது உன் நினைவு.....

உனது
கருப்பு பொட்டாய்
சிவப்பு சைக்கிளாய்
கைக்குட்டையாய்
காலணியாய்
வெள்ளிக் கொலுசாய்
விதியில்லை பிறக்க.....

காசு பணம்
தேடச்சென்ற கால ஓட்டத்தில்
உன்னை தொலைத்துவிட்டு
தினம் தினம்
காத்துக்கொண்டிருக்கிறேன்.....

எனது
முகவரி தெரியாத
உன்னிடமிருந்து வரும்
கடிதத்திற்காக.....

எனது
தொலைபேசிஎண் தெரியாத
உன்னிடமிருந்து வரும்
அழைப்பிற்காக.....

உனக்காக
கல்லறையில் கூட
பூத்துக்கிடப்பேன்
உன் கால்தடம் பட
காத்துக்கிடப்பேன்.....

வருவாயா?

இப்படித்தான் நீ



இப்படித்தான்
நீ எப்போதும்

சேலை கட்டுகிறேன்
என்று சொல்லி
என்னையும் சேர்த்து
சொருகிக்கொண்டு
போய் விடுவாய்

ஒரு ஓரமாய்
தவித்துக் கொண்டிருக்கும்
உயிரைப் பிடித்து வந்து
உச்சி நுகர்ந்து போவாய்

நெற்றியில் முத்தமிட்டு
நித்திரையை ஓடவிட்டு
தட்பவெப்ப நிலையை
தலைகீழாய் மாற்றுவாய்

உன்னுடைய
வளைவுகளில் வாடவிட்டு
நெளிவுகளில் தீயவிட்ட
என்னை ரசிப்பாய்

சிரிப்புகளை சிதறவிட்டு
உயிர்ச் செடியைப் பிடித்து
உதிர்த்துவிட்டுப் போவாய்

ஒன்றும் தெரியாதது போல்
முந்தானை நுனி நீட்டி
என்னை
முடிந்துகொண்டு போவாய

நெஞ்சில் தலைசாய்த்து
நின்று போன இதயத்தை
எழுத்தோடச் செய்வாய்

உன்
வாயிலிருந்து வரும்
வார்த்தைகள் கொண்டு
என்னுடைய
இன்ப துன்பங்களை
தீர்மானிப்பாய்

என்னுடைய
உயிர்த் துடிப்பையும்
நாடித் துடிப்பையும்
கண்ணசைவுகள் கொண்டு
கட்டுப்படுத்துவாய்

திரும்பத் திரும்பத்
திரும்பிப் பார்த்து
என் ஆயுட்காலத்தை
அதிகப்படுத்துவாய்

இப்படித்தான்
நீ எப்போதும்.....

எதுவும் இல்லை



நினைப்பதற்கு
நேரம் இல்லை
உனக்கு.....

உன்
நினைவைத் தவிர
வேறு எதுவும் இல்லை
எனக்கு.....

உயிர் உண்ணி


தாவர உண்ணி
மாமிச உண்ணி
நீ அறிவாய்

உயிர் உண்ணி
அறிவாயா?

உன் நினைவுதான்
அது.....

எப்பொழுது?



எங்கு போனாலும்
கூடவே வருகிறது
உன் நினைவு.....

நீ
கூட வருவது
எப்பொழுது.....

உயிர்



இரண்டு உயிர் இருந்தால்
எனக்கொன்று
தருவேன் என்றாய்

இந்த ஒரு
உயிரும் கூட
உனக்கென்றால்
தருவேன் நான்.....

தருவாயா?



 என்ன கேட்டாலும்
தருகிறேன் என்கிறாய்

"என்னை மட்டும்"
கேட்கிறேன்.....

தருவாயா?

அற்ப ஆயுசு



"அற்ப ஆயுசுடா
உனக்கு....."

எப்போதோ
ஜோசியர் சொன்னது
நினைவுக்கு வருகிறது
எனக்கு

நீ என்னை
பார்த்துவிட்டுப் போகும்
ஒவ்வொரு முறையும்.....

ஆயுள் தண்டனை

கேள்விப்பட்டதுண்டு
இப்போது தான்
அனுபவிக்கிறேன்
முதன் முதலாய்
உன்னால்.....

நினைவு



அடிக்கடி
தட்டித்தான் விடுகிறேன்
ஆனாலும் முடியவில்லை

கம்பளிப் பூச்சியாய்
ஊறும்
உன் நினைவுகளை.....

தலையழுத்து



எல்லாம்
தலையெழுத்துப்படிதான்
நடக்குமாம்

சீக்கிரம்
எழுதிவிட்டு கொடேன்

ஆசையாய் இருக்கிறது
என் தலையழுத்தைப்
படித்துப் பார்க்க......

காதல்



விலைவாசியைப் போல
நாளுக்கு நாள்
ஏறிக்கொண்டே போகிறது
உன் மீதான என் காதல்.....

தந்துவிட்டுப் போ



வரம் தர
மனமில்லை எனினும்
ஒரு சாபமாவது
தந்துவிட்டுப் போ

வாழ்ந்துவிட்டுப் போகிறேன்
அதனுடனாவது.....

முடிவு





எத்தனையோ தேர்வுகள்
எழுதிவிட்டு
காத்திருந்ததுண்டு
முடிவுக்காக

ஆனால்
இதுபோல் ஒன்றும்
உயிரைப் பிடித்துவைத்து
உலக்கையில்
இடித்ததில்லை

என்னை
கேட்கவைத்து கேட்கவைத்து
நீயும் கூட
தெய்வமாகிப் போனாய்

எதை கொடுக்கப்போகிறாய்

நான்
விதைக்கப்பட நந்தவனமா......
புதைக்கப்பட பாலைவனமா......

விருப்பமுண்டா?



தொலைவதற்காகவே நான்.....
என்னை
தொலைப்பதற்காகவே நீ.....

தொலைவதில்
விருப்பமுண்டு எனக்கு
என்னை
தொலைப்பதில்
விருப்பமுண்டா உனக்கு?

சுமப்பாயா?



தினம் தினம்
உன்னை சுமக்கும் என்னை
என்றாவது ஒரு நாள்
சுமப்பாயா?

உனக்குள்
உயிரோடு.....

நேரங்கள்



காதலித்த நேரங்களை விட
அதிகமானது
என்னுடன் நீ
சண்டையிட்ட நேரங்கள்...

எனினும்,
இனி நாம்
வாழப்போகிற நேரங்களை விட
அதிகமானது
நாம் இருவருமாய்
வாழ்ந்து முடித்த
நேரங்கள்.....

நிறுத்திக்கொள்



இறந்துவிட்டது இதயம்

இனியாவது நிறுத்திக்கொள்
உன் பார்வையை வீசி
படுகொலை செய்வதை.....

Architecture



அழகான Architecture
உன் இதயம்

அதிகம்
சேதாரமின்றி
அடிக்கடி மாறிக்கொள்கிறது.....

நீ இல்லை



நினைவில் தீப்பிடித்து
நெஞ்சம் எரிகிறது
அணைப்பதற்கும் நீயில்லை
அணைப்பதற்கும் நீ இல்லை.....