Friday, July 12, 2013

வருவாயா?



அது ஒரு வசந்த காலம்

அவசர அவசரமாய்
குளித்துவிட்டு
சாப்பிட்டும் சாப்பிடாமலும்
லட்சியத்தோடு ஓடிவருவேன்

நீ வரும் பேருந்தை
பிடிக்கவேண்டும்
என்பதற்காக.....

படியிலேயே தொங்கி
பழக்கப்பட்ட நான்
அப்போதெல்லாம்
உள்ளே வந்துவிடுவேன்

உனைப் பாரக்கவேண்டும்
என்பதற்காக.....

அங்கும் இங்குமாய்
குனிந்தும் நிமிர்ந்தும்
ரொம்பவே
சிரமப்பட்டு போவேன்

ஒருமுறை உன்னை
முழுதாய் பார்ப்பதற்குள்.....

நீயோ ஒரு ஓரமாய்
வளைந்து நிற்பாய்
நெல்லைச் சுமந்த
நெற்கதிராய்
பாதம் பாரத்து.....

நானோ
இமைப்பொழும்
இமைக்காமல்
ரசித்துக்கொண்டிருப்பேன்
இலக்கியமான
உன் முகத்தை.....

பேருந்தில்
சுய நினைவோடு
ஏறும் நான்
நீ இறங்கும்போது தான்
சுயநினைவுக்குத்
திருப்புவேன்.....

தினம் தினம்
படிக்கத் தவறுவதில்லை
உன் தலைவகிட்டில்
எழுதியிருக்கும்
என் தலையெழுத்தை.....

எனக்குத் தெரிந்து
உன்னைச் சுற்றிய
பொழுதுகள் தான் அதிகம்
கோவிலைச் சுற்றிய
பொழுதுகளை விட.....

உனது
குனிந்த நடையில்
கவிழ்ந்து போனது
என் இதயம்.....

உனக்குத் தெரிந்திருக்க
நியாயமில்லை

உன்
இரட்டைச் சடைகளின் நடுவே
என் உயிர்
ஊசலாடிக்கொண்டிருப்பது......

எங்கேயாவது
ஊருக்குச் சென்றுவிடலாம் என்றால்
அங்கும் வந்து
உதைக்கிறது உன் நினைவு.....

உனது
கருப்பு பொட்டாய்
சிவப்பு சைக்கிளாய்
கைக்குட்டையாய்
காலணியாய்
வெள்ளிக் கொலுசாய்
விதியில்லை பிறக்க.....

காசு பணம்
தேடச்சென்ற கால ஓட்டத்தில்
உன்னை தொலைத்துவிட்டு
தினம் தினம்
காத்துக்கொண்டிருக்கிறேன்.....

எனது
முகவரி தெரியாத
உன்னிடமிருந்து வரும்
கடிதத்திற்காக.....

எனது
தொலைபேசிஎண் தெரியாத
உன்னிடமிருந்து வரும்
அழைப்பிற்காக.....

உனக்காக
கல்லறையில் கூட
பூத்துக்கிடப்பேன்
உன் கால்தடம் பட
காத்துக்கிடப்பேன்.....

வருவாயா?

No comments:

Post a Comment