இப்படித்தான்
நீ எப்போதும்
சேலை கட்டுகிறேன்
என்று சொல்லி
என்னையும் சேர்த்து
சொருகிக்கொண்டு
போய் விடுவாய்
ஒரு ஓரமாய்
தவித்துக் கொண்டிருக்கும்
உயிரைப் பிடித்து வந்து
உச்சி நுகர்ந்து போவாய்
நெற்றியில் முத்தமிட்டு
நித்திரையை ஓடவிட்டு
தட்பவெப்ப நிலையை
தலைகீழாய் மாற்றுவாய்
உன்னுடைய
வளைவுகளில் வாடவிட்டு
நெளிவுகளில் தீயவிட்ட
என்னை ரசிப்பாய்
சிரிப்புகளை சிதறவிட்டு
உயிர்ச் செடியைப் பிடித்து
உதிர்த்துவிட்டுப் போவாய்
ஒன்றும் தெரியாதது போல்
முந்தானை நுனி நீட்டி
என்னை
முடிந்துகொண்டு போவாய
நெஞ்சில் தலைசாய்த்து
நின்று போன இதயத்தை
எழுத்தோடச் செய்வாய்
உன்
வாயிலிருந்து வரும்
வார்த்தைகள் கொண்டு
என்னுடைய
இன்ப துன்பங்களை
தீர்மானிப்பாய்
என்னுடைய
உயிர்த் துடிப்பையும்
நாடித் துடிப்பையும்
கண்ணசைவுகள் கொண்டு
கட்டுப்படுத்துவாய்
திரும்பத் திரும்பத்
திரும்பிப் பார்த்து
என் ஆயுட்காலத்தை
அதிகப்படுத்துவாய்
இப்படித்தான்
நீ எப்போதும்.....
No comments:
Post a Comment